Tuesday, July 22, 2014

ரெளத்திரம் பழகு !

மது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் !

" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது ! "

" எங்க வீட்டுக்காரரோட கோபத்துக்கு முன்னால யாராலும் நிக்க முடியாது ! "

" நான் கொஞ்சம் முன்கோபி ! "

கோபத்தில் ஒரு மனிதனின் உருவமே முற்றிலும் வேறுவிதமாக மாறிவிடுகிறது ! குரலை உயர்த்தி பேசுவதில் தொடங்கி, பொருட்களை வீசி எறிவது வரை, சில நேரம் எதிரிலிருப்பவரை அடித்துவிடுவது வரை கோபத்தின் வெளிப்பாடு பலவகை !

சரி, " ஆத்திரத்தில் அறிவிழத்தல் " உண்மைதானா ?

ஆழமாக யோசித்தால் இல்லை என்றே படுகிறது ! கோபமும் இடம், பொருள், ஏவல் அறிந்தே வெளிப்படும் என தோன்றுகிறது ! மேலிருந்து கீழாக பாயும் நீரை போன்றது கோபம் ! அது எப்போதும் நம்மைவிட வலிமையில் குறைதவரிடமே தோன்றுகிறது. இங்கு வலிமை என்று நான் குறிப்பிடுவது உடல் வலிமையை மட்டுமல்ல. அது பொருளாதாரமாக, சமூக ஏற்ற தாழ்வாக கூட இருக்கலாம்.


அரசியல்வாதி கூட கோபத்தில்கண் சிவக்கும்போது அருகில் நிற்கும் அப்பாவி தொண்டனை தான் அறைகிறார் ! அவரை திட்டமிட்டு தரக்குறைவாய் விமர்சிக்கும் மாற்றுகட்சி தலைவரிடம் கூட்டணிக்காக போகும்போது அரவணைத்து அகமகிழுகிறார் ! அதிக இடம் கிடைக்கவேண்டுமல்லவா ?!


ஒரு உதாரணம்...

தெருவில் நடந்து கொண்டிருக்கிறோம்... எங்கிருந்தோ ஓடி வந்த சிறிய நாய்க்குட்டி நமது விலை உயர்ந்த கால்சட்டையில் சிறுநீர் கழிக்க முற்படுகிறது... ஒரே எத்தாக எத்தி நாய்க்குட்டியை விரட்டிவிடுவோம்தானே ?

அந்த சிறிய நாய்க்குட்டியின் இடத்தில் நம் இடுப்புயரம் வளர்ந்த ஒரு முரட்டு நாயை கற்பனை செய்துகொள்ளுங்கள் !

கால் சதைக்கு வந்தது கால்சட்டையோடு போயிற்று என நினைத்து அந்த நாய் சிறுநீர்கழித்து செல்லும்வரை சப்தநாடியும் ஒடுங்கி நிற்போம் இல்லையா ?!

மற்றொரு உதாரணம் !

இன்று நமக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்க போகிறது... தலைமை அதிகாரியை சந்திக்க போகிறோம்... ஏற்கனவே தாமதமாகிவிட்டது ! நேர்த்தியான உடையில் வீட்டிலிருந்து அவசரமாய் வெளியேறும் நேரம்...

" பேனாவை மறந்துட்டீங்க... "

கொண்டுவருபவர் மனைவியோ, பிள்ளையோ, வேலைக்காரரோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ! ஏதோ ஆர்வக்கோளாறில் உங்களிடம் நீட்டும் பேனாவை அவர் அவசரமாய் திறக்க, அதிலிருந்து தெரித்த மை நம் சட்டை முழுவதும் !

" அறிவிருக்கா உனக்கு... " என தொடங்கி ஆடிவிட மாட்டோம் ?!

இதுவே நம் உயரதிகாரியின் முன்னால்...

நமது வேலை உயர்வு உத்தரவில் கையெழுத்திடுவதற்கு அவர் பேனா மூடியை திறக்க, மை நம் சட்டையில் தெரித்துவிடுகிறது ! அவர் பதறுகிறார்...

" அட விடுங்க சார் ! துவைச்சிட்டா போயிடும்... அப்படி போகலேன்னாலும் என்னோட பதவி உயர்வு ஞாபகார்த்தமா இருந்துட்டு போகட்டுமே சார் ! எங்க சார் என்னோட சட்டையிலேயே பதவி உயர்வு கையெழுத்து போட்டுட்டார்ன்னு சொல்லிக்குவேன் ! "

எப்படி வழிவோம் ?!


வலிமையின் வெளிப்பாடாக‌ முன்னிறுத்தப்படும் கோபம் உண்மையில் பயத்தின்,இயலாமையின் வெளிப்பாடு !

சிறிய நாயாகட்டும், பெரிய நாயாகட்டும், அதிகாரி உதாரணமாகட்டும், அனைத்திலும் பயமே கோபத்தின் வெளிப்பாடாக அமைகிறது ! விலை உயர்ந்த கால்சட்டையை அசிங்கபடுத்திவிட்டதே என்ற இயலாமையில் நாய்க்குட்டியை எட்டி உதைத்த கோபம், பெரிய நாயை ஒன்றும் செய்ய முடியாது எனும் போது அடங்கி விடுகிறது ! வேலைக்கு தாமதமாகிவிடுமே என்ற கோபத்தில் கத்தும் நாம், இந்த மைக்காக கோபித்தால் அதிகாரி எங்கே நமது வேலை உயர்வுக்கு உலை வைத்துவிடுவாரோ என பம்மிவிடுகிறோம் !

நம் பேட்டையின் சண்டியர் தெருவில் வம்புக்கிழுத்தால் ஒதுங்கிவருவோம் !

" சாக்கடையில கல்லெறிஞ்சா நமக்குதான் சார் அசிங்கம் ! "

அறிவுரை வேறு !

ஆனால் நமது இயலாமையினால் அடங்கிய கோபம் நமக்கு அடங்கி நடப்பவர்கள்மீது இன்னும் ஆக்ரோசமாய் பாயும் !

" என்னா காபி இது.....?!  சூடும் இல்ல... சர்க்கரையும் இல்ல... ! "

மாலையில் வீடு திரும்பியதும் ஆசையாய் வரவேற்கும் அப்பாவி மனைவிமீது பாயும் ! நமது சமூகத்தில் பல ஆண்களின் கோபத்துக்கான இடிதாங்கிகளாக இருப்பது அப்பாவி மனைவிகள்தான் !

மதிப்பெண் குறைந்த பிள்ளைகளை இழுத்துபோட்டு அடிப்பதும் இலயாமைதான் !

" ஏன்டா.. உன்னை டாக்டராக்கனும்,கலெக்ட்டராக்கனும்ன்னு நான் ராத்திரி பகலா உழைக்கிறேன்... "

இதுதான் ! நாமே நமது சமூக அந்தஸ்த்துக்காக, அவர்களின் விருப்பம் அறியாமல் தீர்மானித்துக்கொண்டவை நடக்காமல் போய் விடுமோ என்ற பயம் ! இயலாமை !

கோபத்தைவிட மோசம் முன்கோபம் ! ஏதோ ஒன்று நடந்த பிறகு கோபப்படுவதையாவது நியாயப்படுத்த முயலலாம்... அதென்ன முன்கோபம் ?!

" சார் ரொம்ப முன்கோபி ! "

இதைவிட கேவலமான அறிமுகம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ! தன் கோபத்தையே திறமையாய் முன்னிறுத்தும் அறியாமை !

ஒரு நிமிட கோப உணர்வால் நமது உடலும் மனதும் எவ்வளவு பாதிக்கப்படுகிறது தெரியுமா ? சட்டென உயரும் இரத்த அழுத்தத்தில் தொடங்கி, நரம்புத்தளர்ச்சிவரை கோபத்தினால் உண்டாகும் கேடுகளை பல பக்கங்களுக்கு எழுதலாம் !

கோபம் தவறென்றால் நம்மை சுற்றி நடக்கும் தவறுகளை பார்த்துக்கொண்டு சும்ம இருக்க முடியுமா ?

கோபம் இயலாமையின் வெளிப்பாடென்றால் தன் வாழ்க்கை முழுவதுமே கோபக்கார மனிதனாக உலாவி சமூக சீரழிவுகளை சினந்து கவிதைவடித்தானே பாரதி ? எமனையே எள்ளி நகையாடி, அந்த எமனின் வாகனமும் நெருங்க பயப்படும் யானையின் காலால் மாய்ந்த அவனின் வாழ்க்கை தவறா ?!

இல்லை தவறில்லை ! கோபம் தவறில்லை, அது நமது கட்டுக்குள் இருக்கும்வரை ! ஒருவர் மீதான கோபத்தை அதற்கு சம்மந்த்தமில்லாத  ! மற்றொருவரிடம் காட்டாதவரை !


அதைதான் " ரெளத்திரம் பழகு " என்றான் பாரதி !

சமூகத்தின் பெண்ணடிமை கொடுமையை கண்ட பாரதி அதனை தன்னால் மாற்ற முடியாது என்ற இயலாமையில் தன் மனைவியிடம் எரிந்து விழவில்லை ! மாறாய் அந்த வழக்கத்தை ஒழிக்க தானே முன்னுதாரணமாய் திகழ்ந்தான். மனைவி கணவனின் பின்னால் நடந்த அந்த காலகட்டத்தில் தன் மனைவியின் தோள் மீது கைபோட்டுவீதிகளில் உலா வந்தவன் பாரதி !

இரயில் பெட்டியிலிருந்து தன்னை வெளியே தள்ளிய வெள்ளை அதிகாரியை எட்டி உதைக்கவில்லை காந்தி ! அந்த கோபத்தை கனலாய் தன்னுள் தாங்கி இந்திய சுதந்திரத்துக்கே வழிவகுத்தார் !

" வெங்காயம் " என திட்டியதோடு நில்லாமல் சமூக ஏற்ற தாழ்வுகள் தொடங்கி மூட பழக்கங்கள் வரை அனைத்தையும் சாடியதால்தான் பெரியாரை பற்றி இன்றும் பேசுகிறோம் !

இதுதான் ரெளத்திரம் பழகுதல் ! கோபத்தை மடை மாற்றுதல் !!  நமக்கு கோபம் தரும் செயல்களை முதலில் நாம் செய்யாதிருக்க வேண்டும். நமக்கு முன்னாலிருப்பவர் யாராக இருந்தாலும் அவர் செய்தது தவரென்றால் நேரடியாக நிதானமாக சுட்டிக்காட்டும் நெஞ்சுரம் வேண்டும்.

குரல் உயர்த்தி பேசினால்தான் கோபத்தை தெரிவிக்கலாம் என்றில்லை. நம் கோபம் நியாயமெனில் நமது ஒரு பார்வையே எதிராளியை அடக்கிவிடும் !  ஆத்திரத்தில் நிலை தடுமாறி குழறி பேசும் வார்த்தைகளைவிட வலுவானது சட்டென தோன்றிவிடும் மெளனம் !

இல்லை ! என்ன முயற்சித்தாலும் என்னையும் அறியாமல் கோபத்தில் நிலைத்தடுமாறி விடுகிறேன் என்கிறீர்களா ?  சட்டென அங்கிருந்து நகர்ந்துவிடுங்கள் ! இரண்டு மூன்று முறை ஆழ மூச்சிழுத்து, முடிந்தால் ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து பாருங்கள் ! கோபம் காணாமல் போய்விடும் !  கோபத்துக்கான காரணத்தை,முடிந்தால் அந்த கோபத்தையே உற்று நோக்குங்கள் ! சட்டென ஒரு வெளிச்சம் பரவுவதை காண்பீர்கள் !

திரும்பி சென்று உங்கள் தரப்பை நிதானமாய் விளக்குங்கள் ! உங்கள் தரப்பின் காரண காரியங்களை விளக்குங்கள். பல தருணங்களில் கோபத்துக்கான காரணம் சரியான புரிதலின்மையே ! " இதனை செய் ! " என கட்டளையிடுவதைவிட ஏன் செய்ய வேண்டும் என விளக்கி கூறுங்கள். 

ஆத்திரத்துக்கான மற்றொரு முக்கிய காரணம் கெளரவம் ! இவன் சொல்லி நான் கேட்பதா, இவன் என்னை எதிர்ப்பதா என்பவை போன்ற போலி கெளரவங்கள் ! சிறியவரோ பெரியவரோ, ஆனோ பெண்ணோ, ஏழையோ பணக்காரனோ யாராக இருந்தாலும் அவர்களின் பேச்சிலிருக்கும் நியாயத்தை உணர்ந்தோமானாலும் பல நேரங்களில் கோபம் தவிர்க்கலாம்.

ஒரு நிமிடத்துக்கும் குறைந்த நேரத்துக்கு நீடிக்கும் கோபத்தில் தவறி விழும் வார்த்தைகள் பல வருட நட்பை, உன்னதமான உறவுகளை முறித்துவிடலாம். ஆத்திரத்தில் ஓங்கிய கையால் நாம் மிகவும் நேசித்த உயிரை கூட பலி கொடுத்துவிடக்கூடிய சூழ்நிலை அமைந்துவிடலாம்.

நம் கோபத்தினால் உறவு முறிந்த யாரையாவது இனி சந்திக்க நேர்ந்தால்... இன்முகத்துடன் முதல் வணக்கம் நம்முடையதாக இருக்கட்டும் !







இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Saturday, July 5, 2014

தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

து சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம்...

குடியுரிமை சான்றிதழ் விசயமாய் பாரீசிலுள்ள இந்திய தூதரகத்துக்கு சென்றிருந்தேன். வரவேற்பறையில் ஒரு வடஹிந்தியர் ! ( இ இல்லை, ஹி தான் ! ) வந்த விசயத்தை ஆங்கிலத்தில் சொன்னேன்...

" இங்கிலீஸ்  நஹீ... நஹீ... "

என கடுகடுத்தார் !

சரி, பாரீசிலுள்ள  தூதரகம், பிரெஞ்சு மொழியாவது பேசுவார் என்ற நினைப்பில் பிரெஞ்சில் கேட்டேன் ! அதற்கும் அதே நஹீ ! நஹீயை தொடர்ந்து அவர் பேசியது புரியவில்லையென்றாலும் தொனியை வைத்து கணித்ததில் ஹிந்தி பேசத்தெரியாத நீயெல்லாம் இந்தியனா என கரிந்திருப்பார் என தோன்றியது ! நானாவது பரவாயில்லை, எனக்கு பின்னால் நின்ற பிரெஞ்சு இளைஞனுக்கும் அதே நஹீ தான் ! அவன் தலையை சொரிந்துகொண்டு அவருக்கு பின்னால் ஒட்டியிருந்த "  Welcome to India  " போஸ்ட்டரை பார்த்தான் !

வடஹிந்தியர்கள் அப்படிதான் ! இந்தியாவில் ‍ஹிந்தி மொழியை போல இன்னும் ஒரு நாற்பத்து சொச்சம் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் இருப்பதெல்லாம் தெரியாது ! இந்தியா என்றால் அவர்களுக்கு ஹிந்தியா தான் ! வடநாட்டின் அரசியல் தலைவர்களோ தேர்தல் சமயத்தில் மட்டும் வணக்கம் என்ற தமிழ் வார்த்தையுடன் ,

" சாம்பார் தோசா ரொம்ப  புடிக்கும் "



போன்ற வரிகளை மனப்பாடம் செய்து தேர்தல் முடிவு வந்தவுடனேயே அவர்களின் வாக்குறுதிகளைப்போல தமிழ் வார்த்தைகளையும் மறந்துவிடுவார்கள் ! அப்படி ஒரு தீவிரமான " மொழிப்பற்று " அவர்களுக்கு !

உள்ளேயிருந்து ஒரு மலையாள சேட்டன் வந்ததால் நான் தப்பித்தேன் !

" ஆ... தமிளோ... இவிட வா ! "

மலையாள மக்களுக்கு தமிழில் பன்மை இருப்பதே தெரியாது !

வெளிநாட்டு இந்திய தூதரகங்களாகட்டும், உள்நாட்டின் விமான நிலையங்களாகட்டும் தமிழனுக்கு மொழி உதவி செய்வது அவனின் அண்டை மாநிலத்தவர்கள்தான் ! நீர் பங்கீட்டு அலும்பு, அணைக்கட்டு அடாவடி என எத்தனை பிரச்சனைகளிருந்தாலும் தென்னிந்தியன் என்ற முறையிலாவது உதவி விடுவார்கள் !

ஆனால் அவர்களின் மொழியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் ! பல தலைமுறைகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் குடியேறி தமிழர்களாகவே வாழும் மலையாளிகளும் தெலுங்கர்களும் இன்றளவிலும் அவர்களின் வீடுகளில் அவரவர் தாய் மொழியில் தான் பேசிக்கொள்கிறார்கள் ! இதில் விதிவிலக்கு தமிழர்கள் மட்டுமே ! ( நான் தமிழர்கள் என குறிப்பிடுவது தமிழ்நாட்டு தமிழர்களைதான் ! புலம்பெயர்ந்து உலகின் பல திசைகளிலும் பரவிவாழும் ஈழத்தமிழர்களின் மொழிப்பற்றும், தங்கள் குழந்தைகள் தமிழை மறந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் தோற்றுவித்திருக்கும் தமிழ் கல்வி மையங்களும் பாராட்டுதலுக்கு உரியவை )

நமக்கு ஆங்கிலம் தெரியும் என காட்டிக்கொள்வதிலும், பேசுவதிலும் அலாதி பிரியம் ! இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தமிழர்களில் ‍ஹிந்தி தொடங்கி மற்ற இந்திய மொழிகளை கற்றவர்கள் கூட தங்களின் ஆங்கில அறிவை வெளிப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இந்திய மொழிப்புலமையை வெளிக்காட்டுவதில்லை !

இந்த ஆங்கில மோகத்துக்கான காரணம் ஆங்கில காலனியாதிக்கத்தின் பாதிப்பு ! இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது தமிழில் புழங்கிய, 

" கால் காசானாலும் கும்பினி காசு ! "

என்ற சொல்வழக்கை புரிந்துகொண்டால் நம் ஆங்கில மோகத்துக்கான காரணம் புரியும் !

ஆங்கிலம் பயின்று, ஆங்கிலேயர்களிடம்  அரசு வேலை செய்வதை மிக கெளரவமாக கருதிய காலம் அது ! சுதந்திரத்துக்கு பிறகு ஆங்கிலம் இணைப்பு மொழியாக தங்கிவிட்டாலும், மற்ற மொழிக்காரர்களைவிட தமிழர்களின் ஆங்கில மோகம் சற்று அதிகம்தான் !  ஆங்கிலத்தில் பேசுபவர்களைதான் மெத்த படித்தவர்கள் என்றே ஏற்றுக்கொள்கிறோம் ! " தமிழ் வாத்தியார்களை " விட " இங்கிலீஸ் சாருக்கு " நாம் கொடுக்கும் மரியாதையே தனி !

ஆங்கில மோகம் பற்றி தொடருவதற்கு முன்னால் ஒன்றை தெளிவுப்படுத்த வேண்டும் ! அது மொழிவெறிக்கும் மொழிப்பற்றுக்குமான வேறுபாடு.

பிரெஞ்சுகாரர்களின் மொழி வெறியை, முக்கியமாய் ஆங்கிலத்தை அவர்கள் எப்படி வெறுத்தார்கள் என்பது பற்றிய நகைச்சுவை கதை ஒன்று உண்டு.

இரு பிரெஞ்சுகாரர்கள் ஒரு நதியின் ஓரமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள்...

அப்போது நதியில் தவறிவிழுந்துவிட்ட ஆங்கிலேயன் ஒருவன் "  help, help  "  என கத்துகிறான் !

அதனை கேட்ட ஒரு பிரெஞ்சுகாரன் மற்றொருவனிடம் கூறுகிறான்...

" இவன் help, help  என கத்தும் நேரத்தில் நீச்சல் கற்றுக்கொள்ளலாம் ! "

இதுதான் மொழிவெறி !


வேறு மொழி தெரிந்திருந்தாலும், எனது மொழி தெரியாதவரிடம்கூட‌ என் தாய் மொழியில் மட்டுமே பேசுவேன்,  தாய் மொழியிலுள்ள அனைத்து அந்நிய மொழி சொற்களையும் நீக்கியே தீர வேண்டும்  என  மல்லுக்கு  நிற்பது மொழி தீவிரவாதம் !

வேறு மொழிகளை கற்பதாலோ அல்லது அவற்றில் புலமை பெறுவதாலோ தாய் மொழி தேய்ந்துவிடாது ! இன்னும் சொல்லப்போனால் ஒரு மொழியின் இலக்கியங்கள் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்போதுதான் மொழிகள் செழிக்கின்றன !

அதே போல ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் அந்நிய மொழி வார்த்தைகள் ! சென்னை தமிழின் பல வார்த்தைகள் உருது மொழியிலிருந்து வந்தவை ! அவை எப்ப‌டி தமிழினுள் நுழைந்தன என ஆராய்ந்தால் நாம் கடந்துவந்த வரலாறே தெரியும் ! அதே போல புதுவை மாநில தமிழில் கலந்துள்ள பிரெஞ்சு வார்த்தைகள். இப்படி ஒவ்வொரு வட்டார வழக்கிலும் நிச்சயமாய் சில அந்நிய மொழி வார்த்தைகள் இருக்கும். இந்த வார்த்தைகளையெல்லாம் நீக்கினால்தான் தமிழ் தூய்மையாகும் என்பது ஒருவரின் ஆடையலங்காரங்களை அவிழ்க்க நினைப்பதற்கு சமமாகும் !

ஆங்கில, பிரெஞ்சு மொழி அகராதிகள் ஆண்டுதோறும் திருத்தப்படும்போது வழக்கில் இல்லாத வார்த்தைகள் நீக்கப்படும் அதே சமயத்தில் புதிதாய் சேர்ந்த அந்நிய மொழி வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொள்வதும் உண்டு. அப்படி ஆங்கிலமும் பிரெஞ்சும் சுவீகரித்துக்கொண்ட தமிழ் வார்த்தை ஒன்று உண்டு. அது கட்டுமரம் ! கட்டுமரம் என்ற வார்த்தைக்கு அவர்கள் மொழியில் எதையும் கண்டுபிடிக்காமல்  " Catamaran " என்றே சேர்த்துக்கொண்டார்கள் !

இப்படி சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சேரும் ஒன்றிரண்டு வேற்றுமொழி வார்த்தைகளால் ,  " யாதும் ஊரே யாவரும் கேளிர் " எனப்பாடிய கணியன் பூங்குன்றனாரின் தமிழ் செத்துவிடாது !

பின்னர் எதுதான் பிரச்சனை ?

காலையில கடைத்தெருவுக்கு போகலாம் என்றிருந்தேன்... வேறு வேலை வந்துவிட்டது "

 என இயல்பாக பேச வேண்டியதை,

" மார்னிங் ஷாப்பிங் போலம்ன்னு திங்க் பண்றப்போ வேற என்கேஜ்மெண்ட் ! "

என தமிங்கிலீசில் உளறுவதுதான் பிரச்சனை !

வழக்கு தமிழ் இப்படி சித்திரவதை செய்யப்படுவதற்கும், இலக்கண தமிழ் அழிவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன.

முதல் காரணம் மொழியின் இலக்கணத்தை வழக்கு தமிழிலிருந்து பிரித்துவிட்டோம் ! பட்டிமன்றங்களிலும், கவிதை அரங்கங்களிலும் கைத்தட்டல் பெறுவதற்கு மட்டுமே இலக்கணம் பயன்படுகிறது ! ( இன்று அந்த பட்டிமன்றங்களிலும் நடிகைகளின் " தமிளே " கைதட்டல் பெறுகிறது ! )

குழந்தைகளுக்கு தாய் மொழியை முறையாய் கற்றுவிக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கும் முன்னால் பெற்றோர்களையே சாரும். பிரான்சில் பிரெஞ்சு வார்த்தைகளை தவறாக உச்சரிக்கும் பால்ய வயது குழந்தைகளைகூட பெற்றோர்கள் கடுமையாக பேசி, திருத்துவதை கண்டிருக்கிறேன் ! நாமோ லகர, ளகர உச்சரிப்புகளை புதைத்தேவிட்டோம். " ழ " வும் வாழைப்பழ தோல் போல வழுக்குகிறது !  ன, ண குழப்பங்கள் ( எனக்கும் உண்டு ! !! ) தீர்ந்தபாடில்லை ! ஆனாலும் இது போன்ற எழுத்து பிழைகள் தொடங்கி வெண்பா வரை அனைத்துக்குமான தீர்வு தெரியாமல் தவிப்பதற்கு காரணம் போதிய இலக்கண அறிவில்லாதது ! நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளின் தமிழ் உச்சரிப்பை கவனிக்கின்றோம் ?  அம்மா, அப்பா என அழைக்கும் குழந்தைகளின் தலையில் குட்டி,  டாடி மம்மி என கூப்பிட வைக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் ?

ப‌த்திரிக்கை தொடங்கி, வெள்ளித்திரை, சின்னத்திரை என அத்தனை ஊடங்கங்களும் தமிழை சகட்டுமேனிக்கு துவம்சம் செய்கின்றன ! தமிழனுடன் சேர்ந்து அவன் மொழியும் ஏமாளியாகிவிட்டது !


வெகுஜன பத்திரிக்கைகள் நினைத்தால் குறுக்கெழுத்து போட்டி, வார்த்தை விளையாட்டு என மொழி அறிவை வளர்க்க எவ்வளவோ செய்யலாம். ஆனால்  நடிகைகளின் நாபிச்சுழி படங்கள் ஆக்ரமித்த பக்கங்களின் மிஞ்சிய இடங்களில் சினிமா கிசுகிசு ! இதில் குறுக்கெழுத்து போட்டிக்கும் சுருக்கெழுத்து போட்டிக்கும் எங்கே இடம் ?

வெள்ளித்திரையின் தமிழ் சேவையை பற்றி... வேண்டாம் !  சின்னத்திரையிலோ நடிகைகள்,

 " கொன்ச்சம் கொன்ச்சம் டாமில் பேசுது ! "

வெளிமாநில நடிகைகளை விடுங்கள், தமிழ் தெரியாத காரணத்தால் அவர்களுக்கு தெரிந்த ஆங்கில அறிவில் ( வயதை கேட்டால்தான் " இன்னும் பத்தாம் கிளாஸே முடிக்கல மச்சான் !" என போடுகிறார்களே ! ) பேசுகிறார்கள், மன்னித்துவிடலாம் !

அதே வெளிமாநில நடிகைகள், அவர்களின் சொந்த மாநில பேட்டிகளில் அவரவர் தாய் மொழியில்தான் பேசுகிறார்கள். நமது செந்தமிழ்நாட்டு நடிகைகளோ...

" எல்லார்க்கும் வண்க்கம், ஆக்ச்சுவ‌லீ... "

 என ஆரம்பித்துவிடுகிறார்கள் ! இது தமிழ் பேசுபவர்கள் பார்க்கும் நிகழ்ச்சி என நிகழ்ச்சி நடத்துபவர் கூறலாம்தான்  ! ஆனால் நடிகை ஆங்கிலத்தில் ஆரம்பித்தால் நிகழ்ச்சி தொகுப்பாளரும் தனது ஆங்கில அறிவை வெளிப்படுத்தும் கோதாவில் இறங்கிவிடுகிறார் !

ஒரு மொழியின் பண்டைய, சமகால இலக்கியங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு அதன் முன்னனி எழுத்தாளர்களுக்கும் உண்டு. ஆனால் தமிழின் பல முன்னனி, முற்போக்கு எழுத்தாளர்களின் பாணியே வேறு ! ஷேக்ஸ்பியர் தொடங்கி நீட்ஷே, விக்டர் ‍ஹூயூகோ பற்றியெல்லாம் பேசுவார்கள், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களையெல்லாம் சிலாகிப்பார்கள். ஆனால் தமிழின் படைப்புகளை பற்றி, முக்கியமாய் அவர்களின் சமகால சக எழுத்தாளர்களைப்பற்றி மறந்தும் மூச்சுவிடமாட்டார்கள் !

இப்படி, இன்னும் நிறைய சொல்லலாம் தமிழ் மெல்ல சாவதற்கான காரணங்களை !

ஒரு சமூகத்தின் உயிரே அதன் மொழிதான். அந்த மொழியை சார்ந்தே அதன் கலையும் கலாச்சாரமும் ! தாய் மொழியை மறைக்க நினைப்பது தன் தகப்பனை மறைப்பதற்கு சமம் ! சங்கம் வைத்தெல்லாம் தமிழ் வளர்க்க வேண்டாம், தமிழை தமிழாக பேசினாலே போதும் ! தமிழ் தானாக வளர்ந்துவிடும் !






இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.